கழகத்தின் மானமறவர் ஐயா கீரை ஆ.தமிழ்செல்வன் சில நினைவுகள் - கவிச்சுடர் கவிதைப்பித்தன்

 


புதுக்கோட்டை மாவட்டம் என்பதைவிட,

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில், இன்னும் சரியாகச் சொன்னால், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட சோழ மண்டலத்தில், கழகத்தின்

மூத்த முன்னோடி மட்டுமல்ல.. முதன்மையான கொள்கை அடையாளங்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்தான் நினைவில் வாழும் தியாகச்சுடர்,

நாங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும் அண்ணன் கீரை. ஆ.தமிழ்ச்செல்வன் அவர்கள்.


அன்னவாசல் ஒன்றியம், சத்தியமங்கலத்தில், அவர் பெயரில் இயங்கிவரும் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அவர்தம் நினைவிடத்தில், அவரின் அருமைப் புதல்வர், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர், அன்பிற்கினிய இளவல்,

கீரை தமிழ்இராஜா தலைமையில், நேற்றுக் காலை 22.3.2023) மலர்வளையம், மாலை வைத்துப்

பூக்கள் தூவி, கழகத் தோழர்களும், பொதுமக்களும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியச் சான்றோர், ஊழியர்கள், மற்றும் மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் என எண்ணற்றோர் வணங்கி நின்று,

நினைவேந்தல் புகழ்அஞ்சலி செலுத்தினோம்.


எத்தனையோ நிகழ்வுகள்... நினைவுகள்... அவரின் பெருமைகளை எழுதிக்கொண்டேயிருக்கலாம்.


தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில், சட்டத்துறை அமைச்சராக, மதிப்பிற்குரிய மாதவன் அவர்கள் இருந்தபொழுது நடந்த ஒரு நிகழ்வு.


தலைமைச் செயலகத்தில், சட்ட அமைச்சரின் அறைக்குள் கழகத்தோழர்கள் இருவருடன் அவர்களுக்கான பரிந்துரை ஒன்றுக்காக உள்ளே ஒருவர் செல்கின்றார். சென்ற வேகத்தில், மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இருக்கைக்கு நேர் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்துகொள்கிறார்

தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் இப்படி ஒருவர் வந்து, தனக்கு எதிரே அமர்ந்துவிட்டதை எதிர்பாராத அமைச்சர், அப்போது சுற்றியிருந்த சூழ்நிலை, பற்றியிருந்த மனநிலை இவற்றின் பரபரப்பில்,

" நீங்க யாருங்க? நீங்கள் பாட்டுக்கு வந்து இப்படி அமர்ந்தால் எப்படி?" என்று கொஞ்சம் கோபம் வெளிப்படக் கேட்டு விடுகின்றார்.

அடுத்த கணத்தில், அங்கே அமைச்சரின் எதிரே அமர்ந்திருந்தவரிடமிருந்து, தோட்டாக்கள் வெளிப்படுவதுபோல வார்த்தைகள் துள்ளிக் குதித்துவந்து விழுகின்றன!


" என்ன கேட்டீங்க அமைச்சர்?

நீங்க யாரா?  

நான்தான் நீங்க உட்கார்ந்திருக்கும் சேர்(Chair) ! "


அமைச்சர் அதிர்ந்துபோகின்றார்.


"நான் யார் என்று தெரிந்துகொள்வதைவிட, உங்கள் முன் அமர்ந்தது உங்களுக்குப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது மாதிரி உணர்கிறேன். இருவண்ணக்

கரைவேட்டி கட்டி வந்தவன் கட்சிக்காரனாகத்தானே இருப்பான்? வேறு யாருக்கு உங்கள் முன்னால் அனுமதியின்றி உட்கார உரிமை இருக்கின்றது?

குடிசை மக்களின் பிரதிநிதிகளாகக் கோட்டையில் இந்த நாற்காலியில் நீங்களெல்லாம் அமர்வதற்குக் குருதியை வியர்வையாக்கி உழைத்த கழகத்தின் தூரத்துத் தொண்டர்களில் நானும் ஒருவன்.

என் பெயர் கீரை.தமிழ்ச்செல்வன்! எனது ஊர்

கீரனூர்! "


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி, வெறும் மரப்பலகையாலும் இரும்பாலும் செய்யப் பட்டதல்ல! அது கழகத்தொண்டனின் எலும்பு, நரம்பு, சதை, இரத்தத்தால் ஆனது என்று,

தி.மு.க. காரனைத் தவிர வேறு எவரால் சொல்ல இயலும்?


உரிமையும் உணர்ச்சியும் கலந்த உண்மைத் தொண்டனின் சொற்களில் பட்டுத் தெறித்த

பனித்துளி போன்ற தூய்மையான பாசத்தில் கட்டுண்டு போனவராக,

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் மாதவன் அவர்கள், அண்ணன் கீரை. தமிழ்ச் செல்வன் அவர்களை அருகில் அழைத்து, ஆரத்தழுவிக்

கொண்டு, இந்தச் செய்தியை அன்றைய முதல்வர்

தலைவர் கலைஞர் அவர்களிடமும் தெரிவித்து மகிழ்ந்தாராம்.


பல்வேறு வாய்ப்புகளில் ஏடுகளிலும், மேடைகளிலும் இந்த நிகழ்வைப் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன் எனினும், மீண்டும் நினைவூட்டுவது எதற்காக?


வியர்வைசிந்தி உழைத்தவனை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு,

விளைந்து கிடக்கும் வயலில் அறுவடை செய்து,

அனுபவித்துவிட்டுப்போக யார் வேண்டுமானாலும் வருவர்! ஆனால்...

இயக்கத் தொண்டன்தான் கழகத்தின் " விதைநெல்"

என்பதை எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும்,

எவரும் மறந்துவிடலாகாது என்பதற்காகத்தான் இந்த விடிகாலைப் பதிவு!


ஓங்குக அண்ணன்கீரை.தமிழ்ச்செல்வன் புகழ்!

தொடர்க திராவிட இயக்கத் தொண்டு!

வெல்க சமூகநீதி!


   ... கவிச்சுடர் கவிதைப்பித்தன்.

               23.3.2023.

Comments